கொரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ள ஓமைக்ரான் வைரஸ்,
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் கொரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் விதிக்கத் தொடங்கின.
இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஓமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு கட்டாய பிசிஆர் பரிசோதனை அதில் நெகட்டிவ் வந்தால், வீட்டில் 7 நாட்கள் தனிமைக்குப்பின் 8-வது நாள் பிசிஆர் பரிசோதனை அதிலும் நெகட்டிவ் வர வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது.
ஓமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அதற்குள் கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (2.12.2021) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், “கர்நாடகாவில் இருவருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருவருமே வெளிநாட்டவர்கள். ஒருவருக்கு வயது 66, மற்றொருவருக்கு 46. இருவருக்குமே லேசான அறிகுறிகள்தான் காணப்படுகிறது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல்நிலை தொடர்பாளர்கள், 2 ஆம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும் இந்தியாவின் இன்சாக்கோ எனப்படும் சார்ஸ் மரபணு பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஓமைக்ரான் கண்டறியப்பட்டது.
யாரும் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வந்தாலே போதுமானது. கூட்டாகச் செல்வதையும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள்.
இதற்கு முன் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களைவிட 5 மடங்கு வீரியமானது, பாதிப்பைத் தரக்கூடியது ஓமைக்ரான் வைரஸ். உலக அளவில் இதுவரை ஓமைக்ரான் வைரஸால் 29 நாடுகளில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸின் பாதிப்பு குறைந்துவந்த நிலையில், தற்போது ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.