வருமான வரித்துறை நடத்திய சோதனையை குறிப்பிட்டு, ‘3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது’ எனக் கிண்டலடித்து நடிகை டாப்ஸி ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி உள்ளது.

இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோர் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு ‘பேன்டன்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு மற்றும் டிஸ்டிரிப்யூஷன் நிறுவனத்தை நடத்திவந்தனர். இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

இந்நிலையில், வருமான வரி சரியாக செலுத்தவில்லை என புகார் வந்ததாக கூறி, நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் மும்பையில் இருக்கும் அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக மத்திய பாஜக அரசின் திட்டங்களைத் தொடர்ச்சியாக நடிகை டாப்சி விமர்சித்து வருகிறார். அதேபோல், இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பும் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படி எதிர்க்குரல்களை நசுக்குவதற்காகவே மோடி அரசு வருமானவரி சோதனையை நடத்தி உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, பாஜக அரசு தனது திட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது வருமானவரி சோதனை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நடிகர் டாப்சி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு செய்திருப்பது இதனை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இதனால் டாப்ஸிக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் ஆதரவுக் குரல்கள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில், நடிகை டாப்ஸி வருமானவரி சோதனையைக் கிண்டல் செய்யும் விதமாக, 3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது என அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “1. எனக்குச் சொந்தமாக பாரிஸ் நகரத்தில் ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.

2. நான் வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. எதிர்காலத்தில் என்னை சிக்கவைக்க உதவும் என்கிற நோக்கத்தோடு எடுத்திருக்கிறார்கள்.

3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளைத் தேடினார்கள்” என கிண்டலடிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார். நடிகை டாப்ஸியின் இந்த ட்விட்டர் வைரலான நிலையில், பதிவைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மர்ம மரணத்தால் சர்ச்சை