பட்டா வாங்க ஏழாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நான் தொடர்ந்து முயற்சி செய்திருந்தால், 70 நாள்களிலேயே இப்படி பட்டாவை வாங்கியிருக்க முடியும். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியப்படாது என்பதுதான் இந்த லஞ்சப் பேய்களின் மூலதனமே.

பட்டா மாறுதலுக்காக அலைக்கழிக்கக் கூடாது. பத்திரப்பதிவு நடக்கும்போதே பட்டா மாறுதல் செய்வதற்கான பணம் வசூலிக்கப்படுவதால், உடனடியாகப் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பட்டா தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்குள் முடிக்க வேண்டும். இதற்காகக் கிராமம்தோறும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். – திமுக அரசு உத்தரவு.

பட்டா மாறுதலுக்காக 24,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சின்னசேலம் நிலஅளவையாளர் கைது! – தின இதழ் செய்தி.

இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், பட்டா வாங்குவதற்காக மக்கள் எந்த அளவுக்குத் துன்பப்படுகிறார்கள்.. துயரப்படுகிறார்கள் என்று!

இதற்கு நடுவே, அரசாங்க நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் 14 கிரவுண்ட் நிலத்தை அதிகாரிகள் தனிநபருக்கு பட்டா போட்டுவிட்டனர். அந்த இடத்தில் கட்டடங்கள் எழுப்பிவிட்டனர். நிலத்தை மீட்கவேண்டும் என்று நீதிமன்ற படியேறியிருக்கிறார் ஒருவர் – இப்படியும் ஒரு செய்தி.

ஆகக்கூடி, ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, ‘கரன்ஸியின்றி எவனும் கரையான்’ என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. ஆனால், கரன்ஸி இல்லாமலே நான் கரைத்த கதையைத்தான் உங்களிடம் இப்போது கதைக்கப் போகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் என்னுடைய வீட்டுமனையில் (1989-ல் வாங்கியது), 2013 ஆம் ஆண்டு போர்வெல் போட முடிவு செய்தோம். அப்போது இடத்தை அளந்து பார்க்கையில், பத்திரத்தில் இருப்பதைவிட ஆறு அடி குறைவது தெரிந்தது. அது அடுத்திருப்பவரின் நிலத்துடன் சேர்ந்திருந்தது தெரியவரவே, உறவினர்கள் மூலம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சர்வேயரை வைத்து அளந்து விடலாம் என மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டேன். ‘உங்கள் இடத்துக்கு இன்னும் பட்டா மாற்றம் செய்யவில்லை. அதைச் செய்தால்தான் நிலஅளவை செய்ய முடியும்’ எனத் தகவல் சொன்னார்கள்.

மேற்கொண்டு விவரம் கேட்டபோது, தூரத்தில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கிக் கையைக் காட்டினார்கள். அவர் வட்டாட்சியர் அலுவலக புரோக்கர்களில் ஒருவர் என்பது, அவரை நெருங்கிப் பேசியபோது தான் தெரிந்தது. விஷயத்தைச் சொன்னதும், ஒரு பேரம் நடந்து கடைசியாக பட்டா மாறுதலுக்கு ஒரு தொகையை முடிவாகச் சொன்னார். வேலை முடிந்ததும் பணம் தரப்படும் என நேர்மையாக ஒப்பந்தம் போடப்பட்டது.

‘சரி’ என்றதும், ‘வி.ஏ.ஓ -விடம் போய் ஒரு சான்று வாங்கி வாருங்கள்’ என்றார்.

வாங்கி வந்ததும், ‘இதை எடுத்துக்கிட்டு போய் தாலுகா ஆபிஸில் ஒரு சீல் வாங்கி வாங்க’ என்றார்.

அதை முடித்தபிறகு, ‘கருவூலத்தில் போய் பணம் கட்டுங்கள்’ என்று சொன்னார்.

பேரம் முடித்து ஒரு தொகையை முடிவு செய்தது, மொத்த வேலையையும் அவர் முடித்துக் கொடுக்கத்தானே. ஆனால், இவர் பயங்கர கெட்டிக்கார புரோக்கராக முடிந்தவரை நம்மிடமே வேலை வாங்குகிறாரே என்று கோபம் வந்தாலும், அடக்கிக் கொண்டேன்.

அடுத்து, ஒரு சுபயோக சுபதினத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா முகாமில் என்னுடைய அப்ளிகேஷனை அவர் உள்ளே தள்ளிவிட்டார்.

ஒரு மாதம் சென்ற பிறகு, அந்த புரோக்கரைச் சந்தித்தபோது, தலைமை நிலஅளவையாளரிடம் அழைத்துச் சென்றார். ‘எஃப்.எம்.பி மேப் இல்லை. புதுக்கோட்டை ஆபீஸுக்கு எழுதியுள்ளோம். வந்த பிறகு பார்க்கலாம்’ என்று சொன்னார். அப்போதுதான் கவனித்தேன், அந்த அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைவிட, புரோக்கர்கள் அதிகமாகத் திரிந்து கொண்டிருப்பதை! கோப்புகள் வைக்கும் அறையிலிருந்து தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது, கொண்டு வந்து வைப்பது போன்ற வேலைகளையெல்லாம், இந்தியன் பட கவுண்டமணி போலவே பலரும் செய்துகொண்டிருந்தனர்.

அந்தத் தலைமை அளவையரிடம், ‘எஃப்.எம்.பி மேப் எப்படிக் காணாமல் போனது?’ என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி சொன்ன பதிலில் திக்குமுக்காடித்தான் போனேன்- “சுனாமியில அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சு.”

ஆனால், எந்த சுனாமியும் நம் ஊருக்கு வரவில்லையே என்று எதிர்க்கேள்வி கேட்க நினைத்தேன். கேட்காமலே திரும்பிவிட்டேன். வீடு திரும்பியதும், ‘ஐயா, பட்டாவுக்காக விண்ணப்பித்தேன். என்னுடைய மனு இதுதான். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களைத் தரவும்’ என்று ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) சட்டப்படி ஒரு விண்ணப்பத்தை மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.

பத்திரப்பதிவு செய்யும்போதே, நிலஅளவை செய்து பட்டா வழங்குவதற்கான பணத்தையும் (40 ரூபாய் அந்தக் காலத்தில்) கட்ட வேண்டும். அதையும் கட்டியிருந்ததால், அந்த விஷயம் உட்பட இன்னும் சிலவற்றையும் சேர்த்தே ஆர்.டி.ஐ-யில் கேட்டிருந்தேன்.

மூன்று நாள் இருக்கும், பக்கத்து ஊரில் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தேன். அந்திசாய்ந்து ஊருக்கு வந்து இறங்கினால் எதிர்பட்ட அத்தனை பேரும், ‘என்னப்பா, நம்ம மணமேல்குடி தாலூகா ஆபீஸே, உன்னோட மனையில வந்து உட்கார்ந்திருக்கே!’ என்று ஆச்சர்யக்குறியை வீசிச்சென்றார்கள்.

அப்போதுதான் கவனித்தேன்.. என்னுடைய செல்போன் சைலன்ட் மோடில் இருப்பதையும், 40 அழைப்புகள் வந்திருப்பதையும்!

‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. நாங்க பண்ணித் தரமாட்டோமா. ஆர்.டி.ஐ மனுவை வாபஸ் வாங்குங்க. கூடிய சீக்கிரம் பட்டா கொடுத்துடறோம்’ என்று சமாதானப்படுத்தினார்கள்.

‘பட்டா வழங்கினால், வாபஸ் வாங்குகிறேன்’ என்று நான் கறாராகச் சொல்ல, வேறு வழியில்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து என்னுடைய ஆர்டிஐ-க்கு, பத்திரப்பதிவு துறை வசூலித்த பணம் எங்களுக்கு அனுப்பப்பட்டது தொடர்பான தகவல் எங்களிடம் இல்லை’ என்று பதில் வந்தது.

இதையடுத்து, மேல்முறையீடு செய்தேன். ஒரு மாதம் கழித்து, ‘உங்கள் மனுவில் கையெழுத்து இல்லை. திரும்பவும் மனு அனுப்புங்கள்’ என்று பதில் வந்தது (கையெழுத்தை பிளேடால் சுரண்டிவிட்டு, இப்படி பலருக்கும் பதில் அனுப்புவது வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன். அதன்பிறகு, வங்கி டிமான்ட் டிராஃப்டில் மேனேஜரின் கையெழுத்தின் மீது, வெளியில் தெரியும்படியான ஸ்டிக்கர் டேப் ஒட்டுவார்கள் தெரியுமோ.. அந்த ஸ்டிக்கர் டேப்பை வாங்கி வைத்துக்கொண்டேன்).

வேலை விஷயமாகச் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட நான், ஊருக்கு வரும்போதெல்லாம் போய் கேட்பேன். ‘மாவட்ட அலுவலகத்துக்கு எழுதி இருக்கோம். வந்ததும் தருவோம்’ என ஒரே பல்லவியைப் பாடிவந்தனர்.

இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இனி, பத்து பைசா செலவில்லாமல் பட்டா வாங்கியே தீரவேண்டும் என்று எனக்குள் வைராக்கியம்!

இடையில் பல தாசில்தார் வந்தார்கள், சென்றார்கள். ஆனால், பட்டா வந்தபாடில்லை. ஆண்டுகள் ஏழு ஓடிவிட்டன. புதிதாக வந்திருந்த ஒரு தாசில்தார், என் கதையைக் கேட்டு உண்மையாகவே கவலைப்பட்டார். ‘அதிகபட்சம் 15 தினங்களுக்குள் பட்டா வழங்குகிறேன்’ என்று உறுதியாகச் சொன்னவர், தன்னுடைய கைபேசி நம்பரை கொடுத்துப் பேசச் சொன்னார்.

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில், போன் போட்டேன்.. பெண் குரல். ‘தாசில்தார் இல்லையா?’ என்றேன்.

‘நான் தாசில்தார்தான் பேசுகிறேன். புதிதாக வந்துள்ளேன்’ என்றார்.

‘எனக்கு ஒரு அனுமதி வேண்டும்’.

‘என்ன அனுமதி?’

‘எனக்குப் பட்டா வழங்காத மணமேல்குடி வட்டாட்சியரைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கள் கிழமையிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.’

‘சார் நீங்க எங்கே சார் இருக்கீங்க?’

‘அம்மாபட்டினத்தில்’

‘நேரில் வாங்க. ஆவணங்கள் சரியாக இருந்தால், இன்றே பட்டா வழங்குகிறேன்.’

நேரில் சென்றேன்.

‘பீஸ் கமிட்டி மீட்டிங் நடக்குது. நாளைக்கு வாங்க’ என்றார் வாயிலில் நின்ற உதவியாளர்.

‘வட்டாட்சியரிடம் போனில் பேசியபோது வரச்சொன்னாரே!’ என்றதுடம், என் பெயரைக் கேட்டுக்கொண்டு அலுவலகத்துக்குள்ளே சென்று திரும்பியவர், ‘உங்கள காத்திருக்கச் சொன்னாங்க’ என்றார்.

கூட்டம் முடிந்ததும் உள்ளே அழைத்தார் புதிய தாசில்தார். சர்வேயர், தலைமை, துணை, இணை, தலையாரி முதல் விஏஓ வரை அனைவரும் அந்த அறைக்கு அழைக்கப்பட்டனர். அத்தனை பேரையும் பல தடவை சந்தித்துத் தோல்வியிலிருந்த நான் கொந்தளிப்பின் உச்சத்தில்தான் இருந்தேன்.

‘ஏரி, குளம் புறம்போக்கு இடத்துக்கா நான் பட்டா கேட்டேன். இல்லை, வேறு ஒருவர் இடத்துக்கு என் பெயரில் கேட்டேனா? இல்லை, என் இடத்தில் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா? அப்படி இருந்தால் எழுத்து மூலம் தெரிவியுங்கள்’ எனக் கொந்தளித்தேன்.

அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட வட்டாட்சியர், ‘இவருக்கு நில அளவை செய்து இன்றே பட்டா வழங்கியாக வேண்டும்’ என்று கடுமையான உத்தரவு போட, சர்வேயர் சப்தநாடியும் ஒடுங்கிட்டார்.

ஒரு மணி நேரத்தில் ஊருக்கு வந்தவர்கள், நிலத்தை அளந்தார்கள்.

‘என்னிடம் புதிதாக ஒரு அப்ளிகேஷன் கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். 400 ரூபாய் வங்கியில் கட்டச் சொன்னார்கள் அதற்கும் மறுத்துவிட்டேன். 2013-ல் பட்டா கட்டணம் 40 செலுத்தியிருக்கிறேன்’ என்றேன்.

‘தற்சமயம் அது 400 ரூபாயாக மாறிவிட்டது. நீங்கள் முன்பு கட்டியது கணினியில் வரவில்லை. தயவுசெய்து கட்டுங்கள்’ என்றார்கள்.

அப்போதும் நான் மறுக்கவே, ‘பேசாம நாமளே கட்டிடலாம். இதுக்கு மேலயும் வம்ப வளர்த்துட்டு போறது நல்லதில்ல. இந்தப் பணம் அரசாங்கத்துக்குத்தான் போகுதுன்னாலும் நம்ப மாட்டேங்கிறாரே’ என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள, உடனே, வங்கிக்குச் சென்று அந்தக் கட்டணத்தைச் செலுத்தினேன்.. மறுநாளே ஆன்லைனில் என் பெயருக்கான பட்டா பளிச்சிட்டது- ஏழாண்டு போராட்டத்துக்குப் பிறகு..!

பின்குறிப்பு: இதற்கு ஏழாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நான் தொடர்ந்து முயற்சி செய்திருந்தால், 70 நாள்களிலேயே இப்படி பட்டாவை வாங்கியிருக்க முடியும். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியப்படாது என்பதுதான் இந்த லஞ்சப் பேய்களின் மூலதனமே.

ஆக, தொடர் முயற்சியோ.. இடைவிடாத முயற்சியோ.. அவ்வப்போது முயற்சியோ என எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்.

ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் நடந்தே தீரும் என்று நம்பிக்கையோடு முட்டிமோதுவோம் 70 ஆண்டுகளானாலும்.. வேறென்ன சொல்ல, இந்தியாவில் பிறந்துவிட்டோமே. குறிப்பாக தமிழ்நாட்டில்!
செய்தி: ஏ.ஏ.சத்தார்