இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், மேலும் அதிகரிக்க உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில், அனைத்து விதமான பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 22 அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தரவுகள் படி உணவுப் பொருட்களில் பருப்பு வகைகள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
மார்ச் மாதத்தைக் காட்டிலும், ஏப்ரல் மாதத்தில் பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.74%, பழங்கள் மீதான பண வீக்கம் 27.43%, பாலின் மீதான பணவீக்க விகிதம் 2.04%, முட்டை, இறைச்சி, மீன் மீதான பணவீக்க விகிதம் 10.88 % என்று உயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வனஸ்பதி, சோயா, பாமாயில், சூரியகாந்தி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு விலையைக் காட்டிலும், இந்தாண்டில் எண்ணெய் விலை 62% அதிகரித்துள்ளது. மேலும், ஓராண்டில் 56% வரை விலை உயந்திருப்பதாக மத்திய நுகர்வோர் துறை கணக்குகள் கூறுகின்றன. சந்தையில் அதைவிட பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாகக் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் சூரியகாந்தி எண்ணெயின் விலை 110 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் ரூ.70 உயர்ந்துள்ளது. 5 லிட்டர் கேன் எண்ணெய் கடந்த ஆண்டு 465 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 865 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
அதே போன்று பாம் ஆயில், சோயாபீன்ஸ், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று அனைத்து சமையல் எண்ணெய்களும் பல மடங்கு விலை உயந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கிலும் விலை உயர்ந்தே உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 22 மில்லியன் டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் 65% மலேசியா, இந்தோனேசியா, அர்ஜென்டினா, பிரேசில், உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்த ஒரு வருடமாக இந்த நாடுகளில் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் உற்பத்தி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதும் எண்ணெய் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம்.
மத்திய அரசு இறக்குமதி வரியை முறைப்படுத்தினால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உள்ளூர் எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு விற்கலாம் என்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் நிலையில், எண்ணெய் உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை போன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் கண்டுகொள்ளாமல் ஒன்றிய பாஜக மோடி அரசு வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசார பேட்டி