யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் மோடியை, 30 நிமிடங்கள் முதல்வர் மம்தா பானர்ஜி காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை திடீரென ஒன்றிய அரசு பணிக்கு இடம் மாற்றியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

யாஸ் புயல் கடந்த 26 ஆம் தேதி ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. யாஸ் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயல் பாதிப்புகளை பார்வையிட மோடி, மேற்கு வங்கம் சென்ற போது அவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வரவில்லை. ஆளுநர் ஜக்தீப் தங்கர் மட்டுமே வந்திருந்தார்.

விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு, மேற்குவங்க முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டார்.

அதனால் கோபமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்தைப் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மம்தா பானர்ஜி இல்லாமலே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

[su_image_carousel source=”media: 23776,23775″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூடத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு யாஸ் புயல் சேத விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை ஒப்படைத்துவிட்டு, திகாவில் மீட்பு பணிகளை பார்வையிட வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில முதல்வர், அந்நாட்டின் பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்து, கூட்டத்தைப் புறக்கணித்தது இதுதான் முதல் முறை என்ற செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீன் தன்கார், மம்தா பானர்ஜியின் இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் மற்று பாஜக தலைவர்களும் மம்தாவின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசால் திடீரென பணியிடமாற்றம் செய்யபட்ட மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபத்யாய், மே 31 ஆம் தேதி ஒன்றிய அரசின் பணியில் சேர உத்தரவிட்டுள்ளது.

அலபன் பந்தோபத்யாய், வரும் 31 ஆம் தேதி உடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், மேற்கு வங்க தலைமைச் தலைமைச் செயலாளர் பதவியில் மேலும் 3 மாதம் அவர் பணியில் நீடிப்பார் என்று முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த பணியிட மாற்றம் புதிய சர்ச்சையாகி உள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்காளத்திற்கு பிரதமர் செய்த உதவிக்கு ஈடாக அவரது கால்களைத் தொடுமாறு பிரதமர் என்னிடம் சொன்னால், வங்காள மக்களுக்காகவும் வங்காளத்தின் முன்னேற்றத்துக்காகவும் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,

ஆனால் தயவுசெய்து இந்த மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம். வங்காளத்தை இப்படி தண்டிக்க வேண்டாம். கடுமையாக உழைக்கும் தலைமைச் செயலாளரை அவமானப்படுத்த வேண்டாம்.

தலைமைச் செயலாளரை திரும்ப அழைக்கும் இந்த கடிதத்தை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏன் அவரை குறிவைக்கிறீர்கள்? இதைச் செய்வதன் மூலம் நீங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமைச் செயலாளர்களையும்- அனைத்து மாநிலங்களிலும் அவமதிக்கிறீர்கள். தயவு செய்து தலைமைச் செயலாளரை எங்களிடம் திருப்பி ஒப்படையுங்கள்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

உங்க அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவின் ஆணவப் பேச்சு சர்ச்சை