இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம், மேலும் சமூக பரவல் தொடங்கிவிட்டதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருத்துவ சங்கம்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 10,86,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26,951 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த 5 மாநிலங்களில் மட்டுமே சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பல்வேறு கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பிறகும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் விகே மோங்கா கூறியிருப்பதாவது, “இந்தியாவில் நாள்தோறும் 30,000 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இது மிக மிக மோசமான நிலைமையாகும். தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
கிராமங்கள் கொரோனா பாதிப்பு மண்டலங்களாக மாறினால் மீள்வது சிரமமாகிவிடும். இது அபாயகரமான எச்சரிக்கை. கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சமூகப் பரவலாக மாறி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது” என்று வி.கே. மோங்கா கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பூசி மனித பரிசோதனை.. சர்ச்சையாக்கிய பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்
மேலும் தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது பரிசோதனைகள் நிலையில் இருந்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலை நீடித்தால் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சகட்டமானதாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து Public Health Foundation of India -ன் தலைவர் பேராசிரியர் ஶ்ரீநாத் ரெட்டி கூறுகையில், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிக மிக மோசமானதாக இருக்கும். இந்தியாவில் சராசரியாக 30,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று ஶ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.