ஜனவரி 31 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகளை ஏமாற்றிய துரோக நாளாக கடைப்பிடிக்கப்படும், மேலும் பாஜக அரசுக்கு எதிராக ‘மிஷன் உத்தரப் பிரதேசம்’ போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் டெல்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள், சுமார் ஓராண்டிற்கும் மேலாக கடும் குளிரிலும், பனியிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனினும் போராட்டங்கள் தொடர்ந்த போதிலும் ஒன்றிய பாஜக அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என உறுதியாக இருந்தது.

இந்தச் சூழலில் கடந்த நவம்பர் மாதம் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பின்னர் இதுதொடர்பாகத் தீர்மானமும் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும் என்றே பாஜகவினரால் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதவிர விவசாயிகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாகவும் ஒன்றிய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. இருப்பினும், இதுவரை குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டத்திற்கு பின் விவசாயிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்ற பிறகு குறைந்த பட்ச ஆதார விலை வழங்குவது குறித்து ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை.

மேலும் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் கைவிடப்படவில்லை. உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் லக்கிம்பூர் கொலையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் பதவி நீக்கம் செய்யாமல் தற்போதும் மோடி அமைச்சரவையில் உள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள் பாஜக அரசைக் கண்டித்து லக்கிம்பூர் கேரியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்

பிப்ரவரி 1 முதல் ‘மிஷன் உத்தரப் பிரதேசம்’ எனும் பெயரில் பாஜகவின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கு எல்லையில் செய்தியாளரிடம் பேசிய விவசாயச் சங்கத் தலைவர்களில் ஒருவரான யுத்வீர் சிங், “இதுவரை, ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒரு குழுவை அமைக்கவில்லை. அதேபோல் லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் தொடர்புடைய ஒன்றிய இணை அமைச்சரை நீக்கவில்லை.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நாங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தான் அறிவித்தோம். ஒன்றிய அரசு எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளிக்கவில்லை என்றால் வரும் ஜனவரி 31 ஆம் தேதி ‘விரோத் திவாஸ்’ போராட்டம் நடத்தப்படும். அதன்பின் பிப்ரவரி 1 முதல் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் எங்கள் போராட்டத்தைத் தொடங்குவோம்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக விவசாயச் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத் கூறுகையில், “நாங்கள் ஜனவரி 21 உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரிக்கு செல்லவுள்ளோம். அங்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்போம். எங்கள் போராட்டத்தின் அடுத்த நடவடிக்கை விரைவில் ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்போம்” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பாஜகவில் இருந்து சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்தச் சூழலில் விவசாயிகளின் போராட்டம் குறித்த இந்த அறிவிப்பு பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.