கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி இருக்கிறதா என்பதைக் கண்டறியும் எலிசா டெஸ்ட் கருவிகளை புனேவில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளன.
இக்கருவிகளை இந்தியாவில் தயாரிக்க சைடஸ் கேடில்லா நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘கோவிட் கவாச் எலிசா’ (COVID KAVACH ELISA) என்று பெயரிடப்பட்டுள்ள இக்கருவி கொரோனா நோயை 100% துல்லியமாக காட்டுவதாக ICMR தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டரை மணி நேரத்தில் ஒரே கட்டமாக 90 சாம்பிள்களை எலிசா டெஸ்ட் கருவியில் மேற்கொள்ள முடியும் என்று ICMR தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா.. ஆய்வுசெய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சைடஸ் கேடில்லாவுக்கு மட்டும் ஏன் இந்த கருவி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கடந்த செவ்வாய் கிழமை கேள்வி எழுப்பி இருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், இக்கருவியை தயாரிக்க SPAN, J MITRA, Zydus Cadila, Cipla ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சைடஸ் கேடில்லா தவிர மற்ற நிறுவனங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கொடுத்த ஆஃபரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் உருவாகி இருக்கிறதா என்பதை கண்டறிய சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள், தரம் குறைந்து இருந்ததுடன், தவறான முடிவுகளையும் பரிசோதனையில் காண்பித்தது. இதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலேயே இக்கருவி தயாரிக்கப்பட உள்ளது.