கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து வலியுறுத்த பாஜக ஆட்சியில்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.52 லட்சம் ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக ஆட்சி இல்லாத தமிழ்நாடு ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தில், “நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கடமையிலிருந்து ஒன்றிய அரசு தன்னை விடுவித்துக் கொள்ள முயல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான சுமை முழுவதுமாக அல்லது குறிப்பிடத் தகுந்த அளவிலோ மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளின் நிதி நிலைமை ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உள்ளது.

Heard immunity எனப்படும் சமூக தடுப்பாற்றல் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் தடுப்பூசி போடும்போது தான் ஏற்படும். தற்போதைய நிலையில் 3-4 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் தேவையான 2 டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அதிக நிதி ஆதாயங்களைப் பெற மாநில அரசுகள் முயல்கின்றன. அதேபோல வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள மறுக்கின்றனர்.

எனவே, கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளது. எனவே தற்போது இருக்கும் சூழ்நிலையில் கருத்தில் கொண்டு அறிவுசார் உரிமைகளும் காப்புரிமைச் சட்டங்களும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் தடையாக இருக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாட்டில் பற்றாக்குறையைப் போக்கக் கூடிய அளவிற்குத் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் அரசு பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ளது. அதேபோல பொது லைசென்ஸ் முறை போன்றவை குறித்தும் ஒன்றிய அரசு ஆராய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்