இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இப்படம் எடுக்கப்பட்டது.
22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் “இந்தியன் 2” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்வானின் ரசேவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் மற்றும் தென்கொரியாவின் பிரபல நடிகையும் பாடகியுமான சுஜி பே என்பவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இப்படம் சமகால அரசியல் பேசும் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் கமலின் அரசியல் கொள்கைகளைப் பேசும் படமாகவும் ‘இந்தியன் 2’ இருக்கும் எனக் கூறப்படுகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கரின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தில் இல்லாதது ரசிகர்களை சற்று அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், சிம்பு இப்படத்தில் தாத்தா கமலுக்கு பேரனாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் தனக்கு கடைசி படமாக இருக்கும் என முன்னரே கமல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.