ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆளும் கட்சியின் தற்போது சட்டப்பேரவை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இருவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் கிராம மக்களை சந்தித்து பேச சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வின் தலை, கை மற்றும் மார்பு பகுதிகளில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதில் தம்ரிகுண்டா வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவிற்கு ஏற்கனவே மாவோயிஸ்ட்களிடம் இருந்து எச்சரிக்கை இருந்துள்ளது. போலீசுக்கும் உளவுத்துறை தகவல் தெரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவருடைய வருகைக்கு காத்திருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்கள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசா எல்லையையொட்டிய ஆந்திர பகுதிகளிலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ள நிலயில் விசாகப்பட்டணம் மாவட்டம் அரகு தொகுதியின் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அப்பகுதியைவிட்டு தப்பிவிட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதல் சிறப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.