தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். லேசான ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 8 பேரில் ஒரு குழந்தை தவிர மற்ற ஏழு பேரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் இன்று (15.12.2021) மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மேலும் 4 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா- 32, ராஜஸ்தான்- 17, டெல்லி- 6, குஜராத்- 4, தெலுங்கானா- 3, ஆந்திரா- 1, கர்நாடகா- 3, கேரளா- 5, மேற்கு வங்காளம்- 1, தமிழ்நாடு- 1 என ஒமைக்ரான் தொற்று பதிவாகி உள்ளது.