ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உண்டு. திராவிடம் யாரையும் பிரிக்காது, அனைவரையும் அரவணைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி வாழத்துரை வழங்கினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியானது அமைய வேண்டும் எனத் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி!

‘திராவிடம்’ என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். அவருக்குச் சொல்வேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம்.

வர்ணாசிரமத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். மனுநீதியை காலாவதி ஆக்குவது திராவிடம். சாதியின் பேரால் இழிவு செய்வதை காலாவதி ஆக்குவது திராவிடம். பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதி ஆக்குவது திராவிடம்.

இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உண்டு. எத்தகைய அன்னியப் படையெடுப்புகளாக இருந்தாலும், ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் அதனை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால் தான் ஆளுநர் அதனைப் பார்த்து பயப்படுகிறார். யாரும் இதனைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

நான் முன்பு சொன்னதையே நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்! திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும்! திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!

திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்! திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்! அத்தகைய திராவிட மாடல் வளர்ச்சியை நோக்கிய பயணமானது வெற்றிப் பயணமாக ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.