பாஜக ஆளும் பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 05.05.2023 அன்று தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியது.

இந்த படத்தின் ட்ரைலரிலேயே இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த படத்துக்கு தடை விதிக்கமுடியாது என்றும், மாறாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 32000 பாதிக்கப்பட்ட பெண்களை மாற்ற வேண்டும் என்றும் கூறியது. இதனையடுத்து 32000 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறியதற்கு ஆதாரம் இல்லாத காரணத்தால், இது தவறான தகவல் என்றும் 3 சம்பவங்கள் மட்டுமே இவ்வாறு நடந்துள்ளது என்றும் தெரிவித்தது படக்குழு.

இதற்கிடையே இந்த திரைப்படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பாஜக ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்ட அறிக்கையில், 2016 ஆம் ஆண்டில் 7,105 பெண்கள், 2017 ஆம் ஆண்டில் 7,712 பெண்கள், 2019 ஆம் ஆண்டில் 9,246 பெண்கள், 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதராவில் மட்டும் 2021 ஆம் ஆண்டில் 4,722 பெண்கள் காணாமல்போய் உள்ளனர். இந்த தகவல் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான சுதிர் சின்ஹா தெரிவிக்கையில், “காணாமல்போன சில வழக்குகளில், சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். காவல்துறை காணாமல்போனதாக வழங்கப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவற்றை கொலை வழக்கைபோல் எடுக்க வேண்டும்” என்றார்.

குஜராத் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், “எனது பதவி காலத்தில் கடத்தப்பட்ட பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள். கேதா மாவட்டத்தில் நான் எஸ்பியாக இருந்தபோது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், ஏழை சிறுமியை தூக்கிச் சென்று தனது மாநிலத்தில் விற்று கொத்தடிமையாக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள குஜராத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரென் பங்கர், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல் போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.