அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தில் பின்னணி பாடகி பி.சுசீலா ஒரு பக்திபாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகெட் பெற்ற ஆடை படத்தில் அமலாபால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘வீ ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாடகி பி.சுசீலா ஒரு பக்திப்பாடலை பாடியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்பாடல் ஏற்கனவே கடந்த 70 வருடங்களுக்கு முன் சுசீலாவே பாடிய பாடல் என்றும் தங்கள் படத்திற்காக மீண்டும் அந்த பாடலை அவரது குரலில் பாடி தந்ததற்கு நாங்கள் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அமலா பால் தனது படங்களின் மூலம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த விஐபி 2 படம் தெலுங்கில் வெளியானது. அதன்பிறகு ஒரு தெலுங்கு படமும் அமலா பால் நடிப்பில் வெளிவரவில்லை.

தற்போது தனது இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். டீசரைத் தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில், அமலா பால், புகைப்பிடிப்பது, மது அருந்துவது, மற்றொரு நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது என்று இருந்தார்.

இப்படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அமலா பால் கூறுகையில், அந்த காட்சியை எவ்வாறு கையாள்வது என்பதை நான் முதலில் யோசித்தேன். அந்த காட்சி எடுக்கும் போது சில தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்தோம். படப்பிடிப்பின் போது வெறும் 15 பேர் மட்டுமே இருந்தனர். நான் அவர்களிடம், திரௌபதிக்கு 5 கணவர்கள் இருக்கிறார்கள். என்னைப் பாதுகாக்க எனக்கு 15 கணவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.

இப்படம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ஆடை படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.