ஆடைக்கு மேலே மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை (sexual assault) கிடையாது, அந்த சட்டப் பிரிவில் வழக்கு வராது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39) என்பவர், 2016 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு போனதும், சிறுமியின் மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தியுள்ளார். பிறகு சிறுமியின் ஆடையை அகற்ற முயன்றுள்ளார்.
சிறுமியைத் தேடிச் சென்ற சிறுமியின் தாய், சிறுமி அழுவதை பார்த்து விவரம் கேட்டபோது, இந்த தகவல்களை அந்த சிறுமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து செல்வியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளார் அவரது தாய். பின்னர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறி குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. சிறுமியின் தரப்பில் போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா, “இந்த சட்டத்தின் கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார். சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை.
ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் (போக்சோ சட்டம்) என்ற பிரிவின் கீழ் வராது. இது தவறான செயல் தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின் கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல் தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பால் போக்சோ சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். அதேநேரம் ஐபிசி 354 இன் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் மற்றும் ரூ .500 அபராதம் செலுத்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் போக்சோ சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவு 354 ன் கீழும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இப்போது ஹைகோர்ட் அதை ஒரு வருடமாக குறைத்துள்ளது.
பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக தண்டனைகளை கடுமைப்படுத்த வேண்டும் என்று சமீப காலமாக கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், இந்த வழக்கில், ஏற்கனவே விதிக்கப்பட்ட 3 வருட சிறை தண்டனையை 1 வருடங்களாக குறைத்துள்ளது மும்பை உயர்நீதிமன்ற கிளை.
மேலும், ஆடையோடு சேர்த்து மார்பகங்களை அழுத்தும் குற்றங்கள், பாலியல் தாக்குதல் பிரிவின் கீழ் வராது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருப்பதால், பிற வழக்குகளில் இந்த தீர்ப்பு, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயம் உள்ளது. இது பெண்களை போகப் பொருளாக பார்ப்போருக்கு வசதியாக போய்விடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பஸ், ரயில் போன்ற பொது இடங்களில் கூட பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தும். எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ், அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பொது மக்களிடையே கோரிக்கைகள் எழுந்துள்ளன.