பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத ராமர் பிள்ளை, 1996-ம் ஆண்டு முதன்முறையாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக அறிவித்ததை, விஞ்ஞானிகள் வட்டாரம் மட்டும் அல்ல இந்தியாவே வியப்பாகப் பார்த்தது.
 
அதே நேரத்தில் அவரது தயாரிப்பு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னை ஐஐடி விஞ்ஞானிகள், : “இது பெட்ரோலே இல்லை, மோசடி” என்றனர்.
 
மேலும் டேராடூனில் உள்ள பெட்ரோலியத்துக்கான இந்திய ஆய்வு மையமும் `இது பெட்ரோல் அல்ல’ என்று கூறியது.
 
இதை தொடந்து ராமர் பயோஃப்யூல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து மூலிகை பெட்ரோல் விற்பனையைத் தொடங்கினார். குறைவான விலைக்கு பெட்ரோல் டீசலை விற்றார்.
 
பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பை செய்து காட்டினார். இந்நிலையில் 2000-ம் ஆண்டு, ராமர் பிள்ளை 2.27 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு மிக நீண்ட நாள்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்த ராமர் பிள்ளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மறுபடியும் தனது இயற்கை எரிபொருள் தயாரிப்பு ஆய்வுக்கூடத்தை சென்னையில் உள்ள நொளம்பூரில் திறந்தார்.
 
இந்த முறை ராமர் பிள்ளை தான் தயாரிக்கும் மூலிகை எரிபொருளின் விற்பனை உரிமத்தை அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனத்திற்கு அளித்திருந்தார்.
 
அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனத்துடன் இணைந்து விருதுநகரிலும் சென்னையிலும் எரிபொருள் ஆலையை அமைத்தார்.
 
வழக்கம்போல மூலிகை பெட்ரோல் குறித்த பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் மீண்டும் எழ தொடங்கின
 
இப்படியான சூழ்நிலையில்தான் அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனத்தின் மீது மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலகத்தின் உதவி இயக்குநர் பி.கே.இஸ்ஸர் (P.K.Issar) பிரதமர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்டது போன்ற இரண்டு போலிக் கடிதங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கடிதங்கள் பிரதமர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்படவில்லை எனவும் மோசடி புகார் பதிவு செய்திருந்தார்.
 
இதனால் மும்பையைச் சேர்ந்த முகமது சலீம் என்பவர் மீதும், சென்னையைச் சேர்ந்த அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனத்தின் இயக்குநர் உஜகர் சிங் (Ujagar Singh) மீதும் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனம் பயன்படுத்திய போலிக் கடிதத்தில் புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வகத்தின் இயக்குநர் அரியா நங்கை நிறுவனத்தின் எரிபொருளைச் சோதனை செய்து சான்றளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் புகாரை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து நேற்று வியாழக்கிழமை அன்று இரண்டு பேருக்கு எதிராக மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த இரண்டு போலிக் கடிதங்களும் தேபாஸ்ரீ முகர்ஜி என்ற பெயரில் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டு இருந்தது .
 
அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனத்தின் இந்தக் கடிதத்தைப் பல இடங்களில் ஆதாரமாகக் குறிப்பிட்டுப் பேசிய ராமர் பிள்ளையிடம் இது குறித்து மீடியாக்கள் கேட்ட போது  அவர் கூறியதாவது, “இந்த விஷயமே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. எனக்கும் அரியா நங்கை நிறுவனத்திற்கும் சரிவரப் பேச்சுவார்த்தை இல்லை. அவர்கள் எனது மூலிகை எரிபொருள் பார்முலாவைத் திருடப் பார்க்கிறார்கள். அதனால் தற்போது நான் அவர்களுடன் இணைந்து செயல்படவில்லை. பிரதமர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தக் கடிதத்தை உண்மை என்றே நம்பினேன். இப்போதுதான் அது போலி எனத் தெரிகிறது. அரியா நங்கை நிறுவனம் பொருளாதாரரீதியாக சில உதவிகளைச் செய்துள்ளார்கள். அவ்வளவுதான். விரைவில் முறையான அனுமதியோடு மூலிகை எரிபொருளை மக்கள் மத்தியில் கொண்டு வருவேன்” என்றார்.
 
ஆனாலு இதுகுறித்து பேசுவதற்கு அரியா நங்கை இயற்கை எரிபொருள் நிறுவனம் இது வரை எந்த விளக்கமும் அளிக்க மறுத்துவிருகின்றனர் …