நடிகை ஹன்சிகா காவி உடையில் புகைப்பிடிக்கும் காட்சி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் தர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யு.ஆர். ஜமீல் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா நடிக்கும் “மஹா” படத்தில் போஸ்டர்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த போஸ்டர் இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் வி.ஜி. நாராயணன் புகார் அளித்திருந்தார். புகாரில் போஸ்டர் காட்சியை வடிவமைத்த இயக்குநர் ஜமீல் மீதும், நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி வி.ஜி. நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, இன்று (மார்ச்-2) நீதிபதி இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வி.ஜி. நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.