ஜோதிகா, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ராட்சசி’ படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை ஜோதிகா மிக ஆவேசமாக பேசினார்.
சிலர் என்னை பெண் சமுத்திர கனி என்றும், சாட்டை படம் தான் ராட்சசி படமாக எடுக்கப்பட்டுள்ளது என விமர்சிக்கிறார்கள். ஆனால் அப்படி விமர்சித்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் இந்த படம் சமூகத்துக்கு மிகவும் தேவையானது.
அரசாங்க பள்ளி குறித்த படம் என்பதால் அது போன்ற தோற்றம் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நூறு படத்தில் ஒரே மாதிரியாக காதலன் காதலியை காதலிப்பது போன்றும், ஹீரோ 100 பேரை அடித்து துவம்சம் செய்வதும், அதே கிளைமேக்ஸ், அதே காதல் காட்சி இருந்தாலும் அதைப் பற்றி யாரும் விமர்சிப்பதில்லை.
ஆனால் சமூக கருத்தை சொல்லக்கூடிய பள்ளி சம்பந்தமான இந்த படம், சாட்டை படம், சமுத்திரக் கனியோடு ஒப்பிடுவது மிகவும் வேதனையாக உள்ளது. இப்படம் கண்டிப்பாக காப்பி இல்லை.
மேலும், எங்களின் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் பல குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் படிக்கும் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். அடிப்படை தேவைகள் கூட இல்லாத பள்ளிகளாக உள்ளது.
இப்படி அரசு பள்ளிகளில் மிக சிக்கலான நிலையில் படிக்கும் பிள்ளைகள் எப்படி நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்வார்கள். நான் மறுபடியும் கூறிக்கொள்வது சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்த படம் பல முறை வந்தாலும், பல கோணத்தில் வந்தாலும் அது வரவேற்கப் படவேண்டிய ஒரு விஷயம்.
நான் என்னுடைய இரண்டாவது பயணத்தை தொடங்கி உள்ளேன். இது என் வாழ்க்கையில் சிறப்பாக அமைந்துள்ளது. இப்போது தான் பெண்களை மதிக்கும் அதிகப்படியான ஆண்களை பார்க்கின்றேன். தற்போது எனக்கு மிகச்சிறப்பான கதைகள் வந்துக் கொண்டிருக்கின்றது. அதில் சிறப்பானதை தேர்வு செய்து நடித்து வருகின்றேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.