சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை மழையால் மட்டுமே தீர்க்க முடியும் என டைட்டானிக் ஹீரோ லியானார்டோ கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போய்விட்டது. நிலத்தடி நீரும் பெருமளவு குறைந்துவிட்டதால் சென்னை மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படும் செய்தி உலக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து செய்திகள் அறிந்த டைட்டானிக் ஹீரோ லியானார்டோ தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை மழையால் மட்டுமே தீர்க்க முடியும். சென்னையில் உள்ள கிணறுகள் முற்றிலும் வறண்டுவிட்டதால் கடுமையான தண்ணீர்பஞ்சம் அங்கு நிலவுகிறது. சென்னைக்கு தண்ணீர் தந்து கொண்டிருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டது. தண்ணீர்பஞ்சத்தால் ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், சாலையில் நீண்ட வரிசையில் அந்நகர மக்கள் தண்ணீருக்காக காத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மேலும் மெட்ரோ ரயிலில் ஏசி அணைக்கப்பட்டுவிட்டதாகவும், தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. இருப்பினும் மழையால் மட்டுமே சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதால் மக்கள் மழையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் என லியார்னாடோ பதிவு செய்துள்ளார்.

தமிழக ஆளும் கட்சியின் எம்பிக்கள் தமிழகத்தில் தண்ணீர்ப்பஞ்சம் எதுவும் இல்லை எனக் கூறிவரும் நிலையில், உலக அளவில் தமிழக தண்ணீர் பஞ்சம் குறித்து விவாதிக்கப்படுவதாக இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.