வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று, உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கி உத்தரவிட்ட நிலையில், அரசின் நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும் எனக் கூறி 4 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து (65 வயது). சொந்தமாகத் தோட்டம் வைத்து காய்கறி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
அணைக்கரை முத்து தனது பயிர்களைப் பாதுகாக்கத் தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார் எனக் குற்றம்சாட்டி வனத்துறையினர், முதியவரை விசாரணை என கடையத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையின்போது அணைக்கரை முத்துவை அவசர அவசரமாகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் கூட்டி சென்றனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அணைக்கரை முத்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அணைக்கரை முத்துவை வனத்துறையினர் தான் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்தனர் என வாகை குளத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாரிடம் ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்தனர். அதன்படி, அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன், வனத்துறையினர் மற்றும் மின் வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனிடையே முதல்வர் பழனிசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், ‘எங்களுக்கு நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும்’, விசாரணை போதாது, முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை, வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட்டு, அணைக்கரை முத்துவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என 4 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம். 56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்!
56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார்
சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்! pic.twitter.com/i7pOenc9Sc
— M.K.Stalin (@mkstalin) July 26, 2020