தெற்காசியா தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கையை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். அப்போது அவர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்ட ரூ.8,125 கோடி நிதியை (1.15 பில்லியன் டாலர்) அமெரிக்கா கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஹக்கானி குழுவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இதன் தொடர்ச்சியாக லஷ்கர்ஏதொய்பா, ஹக்கானி குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலர்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோன் பால்க்னர் செய்தியாளர்களிடம் கூறிய விவரம் “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தெற்காசிய கொள்கையை ஆதரிக்கும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது. இதேபோல், ஹக்கானி குழு, லஷ்கர்ஏதொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
எனவே பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது. செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பு நாடாளுமன்றத்தின் முடிவு தெரிந்து விடும். அதன்பிறகு, இந்த நிதியை அமெரிக்க ராணுவத்தின் பிற முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியையும் சேர்த்து, பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த 800 மில்லியன் டாலர் நிதி அமெரிக்க பாதுகாப்புத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் சான்றிதழ் அளிக்காததால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவொன்றும் புதிய நடவடிக்கையோ அல்லது புதிய அறிவிப்போ இல்லை என்றார் பால்க்னர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் கூறிய விவரம் ” அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக கூறப்படும் நிதி, பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவியல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த நிதிதான். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ விரைவில் பாகிஸ்தான் வர இருக்கிறார். அவரிடம் இந்தப் பிரச்னை குறித்து பேசுவோம் என்றார்.
சர்வதேச நிபுணர்கள் அமெரிக்கவின் இந்த தடை எற்கனவே நிதி சிக்கலில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கும் புதிதாக பிரதமர் பதவி எற்று கொண்ட இம்ரான்காணுக்கும் பெரும் தலைவலி உண்டாக்கும் என்று கூறுகின்றனர்