அப்பாவி முஸ்லீம்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் ராஜினாமா செய்த இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள்
இலங்கை அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் ராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மவுலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
ஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகளுடன் சில அமைச்சர்களுககு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி புத்த பிக்குகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
 
இதற்கு கண்டனம் தெரிவித்து தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் மீது துவேசம் காட்டப்படுவதாக தெரிவித்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
 
தங்கள் மீது தவறு இருந்தால் எந்த தண்டனைக்கும் தயார் என்றும், அப்பாவி முஸ்லீம்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பதவி விலகிய ஹக்கீம் கூறி உள்ளார்.
 
இது போல் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ஹிஸ்புல்லாஹ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.