சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிர் இழந்தததை அடுத்து, அவரது உடலை அம்பத்தூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மருத்துவரின் உடல் போரூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியற்களையும் தாக்கிவருகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் லட்சுமி நாரயணன் ரெட்டி. வயது 60. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, வானகரத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் டிரைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நெல்லூரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர மருத்துவர், ஏப்ரல் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து எடுத்து சென்றுள்ளனர். மின்மயானத்திற்கு உரிய தகவல் தராதது மற்றும் தங்களுக்குப் உரிய பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவரின் உடலை எரிக்க மறுத்துள்ளனர் மின்மயான ஊழியர்கள்.
பின்னர், திருவேற்காடு மின்மயானத்திற்கு கொண்டு சென்று அங்கும் மறுத்ததால், மீண்டும் அம்பத்தூர் மயானத்திற்கு வந்தனர். மேலும் அம்பத்தூர் பகுதி மக்களும் கொரோனா பாதித்தவரை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய கூடாததென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் உடலைத் அப்படியே விட்டு சென்றுவிட்டனர். மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தகவலறிந்து அம்பத்தூர் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், நோய்த்தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தகனம் செய்ய தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவரின் உடல் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையிலேயே வைக்கப்பட்டது. இறுதியாக மறுநாள் அதிகாலையில் மருத்துவரின் உடல் போரூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய வழி காட்டு நெறிமுறைகள் கொடுத்திருக்கிறோம். தனியார் மருத்துவமனையில் உரிய தகவல் தெரிவிக்காமல் சென்றதால், தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையும், பொதுமக்களின் அறியாமையால் ஏற்பட்ட அச்சமுமே இதற்குக் காரணமாகும். இனி இதுபோன்று நிகலாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.
பிரதமர் மோடி கொரோனா பற்றிய தனது முதல் உரையில் கூறியதை கேட்டு, கொரோனா தொற்றுக்கு எதிராகத் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குள் மற்றும் காவலர்களுக்கு ஆதரவாகக் கைதட்டி மக்கள் அனைவரும் நன்றி தெரித்தனர். ஆனால், நடைமுறையில் கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் சடலத்தைத் தனியார் மருத்துவமனையும், ஊழியர்களும், மக்களும் எப்படி கையாளுகின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.