கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுங்கச்சாவடிகளில் வருகிற 20ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, பொதுமக்கள் மற்றும் சிறு, குறு தொழில்கள் முனைவோரிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலகின் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவிலும் 14425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் பிப்ரவரி 26 முதல் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய போக்குவரத்து தவிர, மற்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்க, சுங்கக்கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 25ம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்(NHAI) அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழில்கள் இயங்கவும், விவசாய பொருட்கள் விற்பனை, மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 20ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (AIMTC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறுகையில், தற்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இயங்கிவரும் நிலையில், அவர்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

நாடே அவதியுறுகையில், பொது போக்குவரத்திற்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது, ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.