அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்டு இந்திய குடியுரிமை பெற்றவர் சமூக சேவகர் அன்னை தெரசா. 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ‘பிறர் அன்பின் பணியாளர்’ என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவிய அன்னை தெரசா 45 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றினார்.
அன்னை தெரசாவுக்கு 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசை கிடைத்தது. அதையடுத்து 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரதரத்னா விருதினையும் வழங்கினர். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.
இதில் எயிட்ஸ் ,காசநோய் ,தொழுநோய்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், தற்போது அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்கும் முயற்சியில் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அன்னை தெரசாவின் திரைப்படத்தை சீமா உபத்யாய் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். அதேபோல் ஹாலிவுட், பாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர். இதுகுறித்த முழு விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
“மதர் தேராசா தி செயின்ட்” என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.