வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய வரும் 26 ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 23 மற்றும் 24 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
 
இந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்த சுமார் 7.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த சிறப்பு முகாமிலும் விண்ணப்பிக்காதவர்கள் வரும் ஏப்ரல் 26 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
 
தேர்தல் ஆணைய விதிகளின்படி வேட்புமனு தாக்கல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
 
இதன்படி பார்த்தல் வரும் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 26 ம் தேதியுடன் முடிவடைகிறது.
 
எனவே பொது மக்கள் வரும் 26 ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி 26 ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவிற்கு முன்பாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அப்படி அடையாள அட்டை வழங்க தாமதம் ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பல்வேறு ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.