அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே ஒற்றை ஓட்டின் மூலம் தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே கடந்த 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் அதிமுக தலைமைக்கு நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தேர்தல் ஆணையாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அதிமுக சட்டவிதிகளின்படி அவர்களுடைய மனு சரியாக உள்ளதாலும்,
நடைபெற்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.