அதிக விலை நிர்ணயித்ததால் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திர பிரதேச அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி செய்ய 2 டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டது. 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டுமே பங்கேற்றிருந்தது.
7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தைவிட அதிக விலையை நிர்ணயித்திருந்தது. இதனால் 2 டெண்டர்களும் அதானி நிறுவனத்திற்கு சென்றது.
அதானி எண்டர்பிரைசஸ் 5 லட்சம் டன் நிலக்கரியை டன் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் என கடந்த மாதம் விலை நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஜனவரி மாதம் 7.50 லட்சம் டன் நிலக்கரியை டன் ஒன்றுக்கு 17ஆயிரத்து 480 ரூபாய் என அந்நிறுவனம் விலை நிர்ணயித்திருந்ததாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலக்கரிக்கான விலையை அதிகமாக நிர்ணயித்துள்ளதாகக் கூறி அதானி நிறுவன டெண்டர்களை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது.
நிலக்கரி கொள்முதலுக்கான டெண்டர்களை விலை உயர்வை காரணம் காட்டி ரத்து செய்வது கடந்த சில ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.