பேட்ட, விஸ்வாசம் படங்களின் முதல் ஒரு வார வசூல் எவ்வளவு, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டதா என்ற விவரங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை எழுப்பியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் பட வெளியீட்டின்போதே, திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க ஆணையம் அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி, ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய ஒரு வருவாய் துறை அதிகாரி, ஒரு மாநகராட்சி அதிகாரி, ஒரு வழக்கறிஞர் அடங்கிய ஆணையத்தை நியமித்தது.

முன்னதாக மதுரையில் பேட்ட, விஸ்வாசம் வெளியான திரையரங்குகளில் 10-17ம் தேதி வரை தேதி வாரியான வசூல் விபரம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டதா, திரையரங்குகளில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தனரா என்ற பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

விசாரணையில் அம்பிகா, மூகாம்பிகை உள்ளிட்ட சில திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்குகள், அங்கு வசூல் செய்யப்பட்ட தொகை அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் முறையாக சோதனை செய்யாத இரு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.