உலக சாதனைக்காக 1353 காளைகள் பங்கேற்ற பிரமாண்ட போட்டியை புதுக்கோட்டை விராலிமலையில் பட்டமரத்தான்கோயில் திருவிழாவையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
 
உலக சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,353 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது.
 
போட்டியில் காளைகள் முட்டியதில் பார்வையாளர் ராமு(25), சசீஷ்குமார்(43) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். 41 மாடி வீரர்கள் காயமடைந்தனர். 
 
போட்டிக்காக 1,353 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதை நேரில் பார்வையிட்ட கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் மார்க், மெலினி ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்திருப்பதாகவும், ஆசிய அளவிலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். உலக சாதனைக்கான சான்றிதழையும் வழங்கினர்.
 
இதற்கு முன்பு 5 மணி நேரத்தில் 647 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், 21 காளைகளை அடக்கிய திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடமும், 16 காளைகளை அடக்கிய திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி இரண்டாமும் பெற்றுள்ளனர்.
 
உலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு போட்டியில் திருச்சியை சேர்ந்த இருவர் முதல் இரு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.