நடிகை அஞ்சலி வித்தியாசமான வேடங்களை தேடி, தேடி நடிப்பவர். தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்கிறார்.
கோலிவுட் திரையுலகில் பிகில் உள்பட பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பேஸ்கட்பால் விளையாட்டு குறித்த படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்புக்கொண்டுள்ளார்.
பேஸ்கட்பால் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் கேரக்டரில் அஞ்சலியும், அவரை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி புகழ் ராமர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அஞ்சலியும் யோகிபாபுவும் லிசா என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, இப்படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம்.
நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன் என்றார்.
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தநிலையில், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அஞ்சலி திடீரென உறுதிப்படுத்தினார்.
சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுவதும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார் என்றார்.
இவர் ஏற்கனவே சொன்னா புரியாது என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையில் இயக்குனர் சினிஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.