அகமதாபாத் சாலைகளில் அசைவ உணவுக் கடைகளுக்கு தடை; மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? – விளாசிய நீதிமன்றம்

‘ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா’ என்று அகமதாபாத் சாலைகளில் அசைவ உணவுக் கடைகளுக்கு தடை விதித்த அகமதாபாத் மாநகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் சாலையோர அசைவ உணவு கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவுகளை சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளுக்கு இந்த பொருந்தும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குஜராத் அரசின் சாலையோர அசைவ உணவு வண்டிக் கடைகளை தடை செய்யும் உத்தரவை ராஜ்கோட், வதோதரா மற்றும் பாவ்நகர் மாநகராட்சிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தன. இதனைத்தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர கடைகளை அகற்றின. சாலையோர அசைவ டிபன் வண்டிக் கடைகளை பறிமுதல் செய்தது.

சாலையோரங்களில் உள்ள அசைவ சிற்றுண்டிக் கடைகளை தடை செய்ததால், வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று தெருவோர வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி அகமதாபாத்தைச் சேர்ந்த 25 தெருவோர வியாபாரிகள் இணைந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பிரேன் வைஷ்ணவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அம்மனுவில், “அகமதாபாத் மாநகராட்சியின் இந்த உத்தரவானது தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கு எதிராக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக அசைவ உணவு சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரசியல் சாசனத்திலோ அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பிற சட்டங்களிலோ, முட்டை அல்லது அசைவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தடை இல்லை.

பின் எந்த அதிகாரத்தின் கீழ் மனுதாரர்கள் உட்பட விற்பனையாளர்களுக்கு, அசைவ உணவு விற்க அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள்? இது மதவெறி என்பதன்றி வேறில்லை” என்று மனுவில் கூறப்பட்டது.

மேலும் எந்தவொரு சட்டப்பூர்வ உத்தரவும் இன்றி விற்பனையாளர்களின் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்களின் வழக்கறிஞர் ரோனித் ஜாய் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த மனு மீதான விசாரணையில் நகராட்சி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இம்மனுவை விசாரித்த நீதிபதி, “மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? அசைவ சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்.

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னைக்கு அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா. ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா. மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா..” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.