ஹரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பலர் பேர் படுகாயமடைந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லி எல்லைகளில் ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 12 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வருவதால் விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.

கடந்த 1 வருடமாக கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைகளில் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை பிரதமர் மோடி ஒருமுறை கூட சந்தித்து பேசவில்லை என விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இன்று (ஆகஸ்ட் 28) கர்னலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். முதலமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஹரியானா முழுவதும் சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் கர்னலின் கராண்டா சுங்கச்சாவடி அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினரின் இந்த தடியடி தாக்குதலில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 26002,26005,26003″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும், சுங்கச்சாவடிகளிலும் மறியலில் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் குறித்து விவசாயிகள் அமைப்பு கூறுகையில், “அமைதியாகப் போராட்டம் நடந்த போதிலும் விவசாயிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

இந்நிலையில், அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் விவசாயிகளின் ரத்தம் சிந்தி உள்ளது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு