“வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் வேண்டாம். சட்டப்பேரவையிலிருந்து வெளிய போக நினைத்தால் போய் விடுங்கள்” என்று சபாநாயகர் அப்பாவு தனது முதிர்ச்சியான அணுகுமுறையால் சட்டமன்றத்தில் ஈர்த்தார்.

திமுக ஆட்சி அமைத்தபிறகு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

அதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அனுப்பாமல் திருப்பி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அனுப்பினார்.

ஆளுநரின் இத்தகைய செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று (8.2.2022) சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்து விவாதம் நடைபெற்றது. அதிமுக, மதிமுக, விசிக, பாமக, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் என பல்வேறு கட்சி உறுப்பினர்களும் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு ஏன் வேண்டாம், தமிழ்நாடு அரசின் மசோதா ஏன் முக்கியமானது என்று தங்களின் வாதங்களை முன்வைத்துப் பேசினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், நீட் தொடர்பாக சீரியஸான விவாதங்களுக்கு மத்தியில், சற்றே சிரிப்பலைகள் எழும் விதமாக சில சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, இந்த நிகழ்வுகள் அனைத்துமே நேரலையாக ஒளிபரப்பப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

“விவாதம் தொடங்கும் முன்பே, குறுக்கிட்டு பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது நயினார் நாகேந்திரன், “மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசும்போது, கடந்த முறை சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். ஆனால் நாங்கள் தான் அன்று வெளிநடப்பு செய்துவிட்டோமே” என்றார்.

உடனே அப்பாவு, “நீங்கள்தான் வெளிநடப்பு செய்தீர்களே தவிர, மற்றபடி மசோதா ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டது” என்றார்.

அடுத்து நயினார் நாகேந்திரன் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து பேசுகையில், “இந்த முறையும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால், நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும்” என்றார்.

மீண்டும் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேச முயன்றபோது, தலையிட்ட சபாநாயகர் அப்பவு, “வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் வேண்டாம். சட்டப்பேரவையிலிருந்து வெளிய போக நினைத்தால் போய் விடுங்கள்” என்றார். இதனால் அவையில் சிரிப்பொலி படர்ந்தது. அதன் ஊடே பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.