சென்னையிலிருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.எனினும் இந்த திட்டத்தால் தொழிற்சாலைகள் பெருகும் , வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆளும் கட்சி கூறி வந்தது.

இதனிடையே விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.அதற்காக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல்லும் நடப்பட்டது. தற்போது உள்ள சாலையின் படி சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்ல 274.300 கி.மீ .தூரம் உள்ளது. ஆனால் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தால் 250.300 கி.மீ. தூரமே இருக்கும் என்று தமிழக அரசின் கருத்தாக இருந்தது.

இதனால் பயண தூரம் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த திட்டம் சேலத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆனாலும் பொது மக்கள் விவசாயிகள் எதிர்ப்பை தெடர்ந்து சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் பாதையில் மாற்றம் செய்துள்ளது.அதன் விவரம் இதோ :

கல்வராயன் மலையை பாதிக்காதவாறு செங்கம்-சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

300 ஏக்கர் வனப்பகுதிக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ.தூரம் மட்டுமே சாலை அமைக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாலையின் அகலம் 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதிலாக 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும்.

சாலையின் மொத்த தூரமான 277 கிலோமீட்டரை குறைக்காமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 2560 ஹெக்டேருக்கு பதில் 1900 ஹெக்டேர் நிலம் தான கையகப்படுத்தப்படும்.

8 வழிச்சாலையோடு இணைப்பு சாலையாக அமைக்க திட்டமிடப்பட்ட 3 சாலைகள் அமைக்கப்படாது.

செங்கம்-அரூர்- அயோத்யாபட்டினம்- சேலம் வழியாக சாலை அமையும்; இதன் நீளம் 110 கி.மீ.

பள்ளப்பட்டி-வேலம்பட்டி-காப்புக்காடு பகுதியில் 2.64 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்திய சாலைகள் அமைக்கப்படும்.

இந்நிலையில் தற்போது திட்டம் மாற்றியமைக்கப்பட்டதால் இதன் மதிப்பீடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது