டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடந்த 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து உள்ளது.

மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 52 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 8 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள், மத்திய அரசு இடையே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, 4 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவை அமைத்தது. இருப்பினும் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியா உள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 15) 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லி விஞ்ஞான் பவனில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருடன், விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து வேண்டுமானால் பேசலாம், ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் விவசாயிகள் முதலில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பு நிர்பந்தித்தது.

ஆனால், இதனை ஏற்க விவசாயிகள் தரப்பு மறுத்துவிட்டது. அரசு நிர்பந்தத்தை பொருட்படுத்தாத விவசாயிகள், 3 வேளாண் சட்டங்களையும் முதலில் திரும்பப் பெற வேண்டும், அதன்பிறகு குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைக்கு மீண்டும் அழுத்தம் தெரிவித்தனர்.

இதனால் எந்த உடன்பாடும் எட்டாமல் இன்றைய 9 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து வரும் 19 ஆம் தேதி மீண்டும் 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்