தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், மாநில விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.4 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

சென்னையில் இளைஞர்களின் குத்துச்சண்டை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 கோடி செலவில் மேலும் ஒரு குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும். நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து, தற்போது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.