ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எஃப்-10 (GSLV F-10) ராக்கெட் பயணம் தோல்வி அடைந்தது.

புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரழிவு, பேரிடர் மீட்பு, விவசாயம் உள்ளிட்டவற்றை பற்றி அறிய இஓஎஸ்-03 (Eos-03) என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.

இஓஎஸ்-03 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். தட்பவெப்பநிலை மற்றும் வானிலை நிலவரங்களை நிகழ்நேர தன்மையில் தொடர்ந்து கண்காணிக்கும்.

இதுதவிர புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும். அதனுடன் வனப்பகுதிகள், விவசாயம், நீர்நிலைகள், மேகத்திரள்கள் வெடிப்பு, இடியின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் இது பயன்படும்.

பூமியை கண்காணிக்கும் இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எஃப்- 10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. மேலும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தூரத்தில் ராக்கெட் நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ராக்கெட் ஏவுதலுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) காலை 5.43 மணிக்கு இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புவிசுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடையவில்லை. 18.39 நிமிடத்தில் செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையவில்லை என்பதால் இத்திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், “ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் இஓஎஸ்-03 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் இரு படிநிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன.

ஆனால், செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தவில்லை. ராக்கெட்டின் கிரயோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் திட்டம் முழுமை அடையவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: எச்சரிக்கும் நாசா