ஒன்றிய பாஜக அரசின் வங்கிகள் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்த பிறகு, ரயில்வே துறை, விமானத்துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, நடப்பு நிதியாண்டில் இருபொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு இருநாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) கூறுகையில், “வங்கிகள் தனியார்மயமாக்கத்தை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால், டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும். தொடர்ந்து போராட்டங்கள், தர்ணாக்கள் நடத்தப்படும்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னுரிமைத் துறைகளைப் பாதிக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் பாதிக்கும். ஒன்றிய அரசின் இந்த திட்டம் முழுமையாக அரசியல் நோக்கம் சார்ந்த முடிவாகும்.

வங்கிகளை பெரிய முதலாளிகள் வசம் கொடுக்க அரசு விரும்புகிறது. நாட்டின் ஒட்டுமொத்த டெபாசிஸ்டகளில் 70 சதவீதம் பொதுத்துறை வங்கிகளில் தான் இருக்கிறது. இந்தவங்கிகளை தனியாரிடம் வழங்கும்போது, சாமானிய மக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் ஆபத்தில் முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறும்போது, “2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுமட்டும் இன்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.