காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
 
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை ஹாவலா பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இவ்வழக்கு வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புடையை மனோஜ் அரோரா தன்னை கைது செய்வதில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.
 
இதே கோரிக்கையுடன் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞரும் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
 
இதனையேற்ற நீதிமன்றம் வரும் 16-ம் தேதி ராபட் வதேராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் பாஜக அரசின்  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சி இதை கூறியுள்ளது