சட்ட பல்கலைக்கழக ஊழல்- பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
 
சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 
ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.
 
‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.