தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குறிப்பாக அருந்ததியர் இயங்கும் ஒரு சமூக சேவை அமைப்பாக ஆதித்தமிழர் பேரவை செயல்படுகிறது. ஆதித்தமிழர்களின் பொருளாதார, பண்பாட்டு, சமூக தரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இதன் நிறுவனர் மற்றும் தலைவர் இரா. அதியமான் ஆவார்.

கடந்த சில தினங்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அக்கட்சியினர் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், ரவுடித்தனமாக பேசுவதை வேடிக்கை பார்க்க இனியும் முடியாது, சீமானை கைது செய்ய வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் இரா. அதியமான் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “வெட்டுவேன்.. குத்துவேன்.. கொலை செய்வேன் என்று பாசிச பயங்கரவாத அரசியலை பேசும் சீமான் கைது செய்யப்பட வேண்டும்.

ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சனநாயக ரீதியில் எதிர் கருத்துக்களை பதிவு செய்யும் தமிழக அரசியலில், செருப்பை தூக்கி காட்டுவது.. என் கையில் ஆட்சி கிடைத்தால் வெட்டுவேன், குத்துவேன், கொலை செய்வேன் பச்ச மட்டையால் வெளுப்பேன் என்று,

வன்முறை பேச்சுக்களை பொதுவெளியில் பேசுவது போன்ற பாசிச பயங்கரவாத அரசியலை செய்யும் பணியை சீமான் அவர்களும் நாதக நிர்வாகிகளும் தொடர்ந்து செய்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

விடுதலைப் புலிகளின் தியாகம் மிக்க போராட்டத்தை கொச்சைப்படுத்துவது விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி கட்டுக் கதைகளை பேசுவது இட்டுக்கட்டி திரித்து பேசுவது, இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை சீமான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் மாற்றப் போவதில்லை.

சீமான் ஒருபோதும் திருந்த போவதுமில்லை. அதற்காக சீமான் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது. அவரது பேச்சுக்கு அவரது நிர்வாகிகளின் நாகரீகமற்ற செயலுக்கும் தக்க நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஆகையால் சீமானை கைது செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் பேச்சுக்களை திட்டமிட்டு
பேசுவதன் மூலம் கடந்த பத்தாண்டு கால அதிமுகவின் ஆட்சியிலும், பாசக ஆட்சியிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை மக்கள் தெரிந்து கொள்ள கூடாது என்று திசை திருப்பும் பணியை சீமான் செய்து வருகிறார் என்பதை பொதுமக்கள் அனைவருக்கும் நன்றாக புரிந்து கொண்டார்கள்..

சீமான் பேசும் பேச்சுக்கு அவரது கட்சித் தொண்டர்கள் வேண்டுமானால் கை தட்டலாம், ஆனால் தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்..” என்று சீமானின் செயல்களுக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.