அரசியல் சமூகம் தேசியம் பாஜக வாழ்வியல்

மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேவ் தீபாவளி பண்டிகைக்காக 8 மாதங்களுக்கு பிறகு செல்கிறார். முன்னதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு சென்றிருந்தார்.

அப்போது வாரணாசியில் உள்ள குடிசைவாசிகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் அந்த பகுதியில் இருந்த அனைத்து குடிசைகளும் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. விழா முடிந்து பல நாட்கள் ஆன பிறகும் அவர்கள் நடைபாதைகளில் தங்க நேர்ந்தது. கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அங்குக் குடிசை அமைத்துச் சென்ற மாதம் குடி புகுந்தனர்.

60 வருடங்களுக்கும் மேலாக இங்கு வாழும் மக்கள் தலித் வகுப்பையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்தவர்கள். பல வருடங்களாக இங்கு வசித்து வரும் இவர்கள் மூங்கில் கூடைகள், பாய்கள், கை விசிறிகள் விற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நாளை (நவம்பர் 30) வாரணாசிக்கு செல்வதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு மீண்டும் மற்றொரு துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த குடிசை பகுதி பிரதமர் மோடி வரும் ஹெலிபேடுக்கு அருகில் உள்ளதால் மீண்டும் குடிசைகள் இடிக்கப்பட்டு அங்கு வசிப்போர் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளனர்.

குடிசைகள் இடிக்கப்பட்டு விரட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு சமூக சேவகர்களான சௌரப் சிங் மற்றும் ஆதிரா முரளி ஆகியோர் உணவு மற்றும் இருப்பிடம் கொடுத்து உதவிகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து அங்கு வாழும் குடிசை வாசிகள் கூறும்போது, “நாங்கள் விரட்டப்படுவது பழகி விட்டது. பிரதமர் அவர்கள் வருடத்துக்கு எத்தனை முறை எந்தெந்த நேரத்தில் வாரணாசிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால் அவர் வருவதற்குச் சிலகாலம் முன்பாக எங்கள் வீடுகளை நாங்களே இடிக்கவும், அதற்கு சில வாரம் கழித்து நாங்களே கட்டிக் கொள்ளவும் ஏற்பாடுகளை செய்துக் கொள்வோம்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு… டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்

நாளை (நவம்பர் 30) வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில், மிர்சாமுரத் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், டோம்ரி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

அங்கு கங்கை ஆற்றில் ராம்காட் படித்துறையில் இருந்து தசாஷ்மேத் காட் படித்துறை வரை படகில் செல்கிறார். தேவ் தீபாவளியையொட்டி, 84 படித்துறைகளில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளால் அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து தசாஷ்மேத் காட் படித்துறையில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். மீண்டும் படகில் ஏறி, சாரநாத் சென்று அங்கு ஒலி, ஒளி காட்சியை பார்வையிடுகிறார். அன்று இரவு, டெல்லி திரும்புகிறார். பிரதமரின் நிகழ்ச்சிகளில், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.