கேதார்நாத் குகையில் மோடி தியானம் செய்தது கேலிக்குள்ளான நிலையில், பாலிவுட் பிரபல நடிகர் அக்க்ஷை குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான டிவிங்கிள் கன்னா மோடியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்க்கு சனிக்கிழமை சென்றிருந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு குகையில் தங்கினார்.

மோடி குகைக்குள் அமர்ந்து தியானம் செய்வதாகக் கூறப்பட்டது. அவர் தியானத்தைத் தொடங்கிய பின் ஊடகத்தினர் உட்பட யாருக்கும் குகையில் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், மோடி தியானம் செய்யும் போஸில் எடுக்க்ப்பட்ட படங்கள் வெளியாகின.

அந்தக் குகையில் மோடிக்கு பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மோடி தியானம் செய்ய பல வசதிகள் கொண்ட குகைக்குச் செல்வது ஏன் என சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது.

இந்நிலையில், மோடியின் குகை தியானத்தைக் கிண்டல் செய்துள்ளார் நடிகை டிவிங்கிள் கன்னா. தனது பதிவில், “கடந்த சில நாட்களாக நிறைய ஆன்மீக போட்டோக்களை பார்த்துவிட்டோம். இப்போது நானும் தியானம் செய்வது போட்டோ எடுப்பது எப்படி, போஸ் கொடுப்பது எப்படி என்பது பற்றி ஒர்க் ஷாப் நடத்தப்போகிறேன். நண்பர்கள் சேர்ந்துகொள்ளலாம். திருமணத்தில் போட்டோ எடுக்கும் தொழிலுக்கு அடுத்து இதுதான் பெரிய தொழிலாக இருக்கும் என நினைக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மெகா சைஸ் காவி நிற நாய் பொம்மைக்குப் பக்கத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல போஸ் கொடுக்கும் படத்தையும் இணைத்துள்ளார்.

டிவிங்கிள் கன்னாவின் கணவரும் பாலிவுட் நடிகருமான அக்‌ஷய் குமார் அண்மையில் மோடியை பேட்டி எடுத்தார். ஆனால், அவரது மனைவி டிவிங்கிள் மோடியை கலாய்த்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.