கேரளாவில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை செப்டம்பர் 10ஆம் தேதி துவங்க உள்ளதாக மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை தெரிவித்து உள்ளார்.

மூலிகைகளில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி கடந்த 1996ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை. ஆனால் அவரது மூலிகை பெட்ரோலை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பை ஏற்கவில்லை. அவரது பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவான ராமர் பிள்ளை, இன்று (செப்டம்பர் 05) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கழிவுநீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் உயிரி டீசல், உயிரி பெட்ரோல், உயிரி சமையல் எரிவாயு தயாரித்து வருவதாகவும்,

தனது தயாரிப்புக்காக கேரள அரசு மூணாறு பகுதியில் 1600 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்து மூலிகை பெட்ரோலை உற்பத்தியை உருவாக்க அனுமதி அளித்துள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் உற்பத்தியை தொடங்குகிறோம் என்றார்.

மூலிகை எரிபொருட்கள் குறித்து என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையில் போதிய ஆதாரத்தை நிருபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்துள்ளது. மூலிகை பெட்ரோல்கள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலை விட பயோ டீசல் வீரியம் மிக்கது என ராணுவத்தினர் ஒப்புகொண்டுள்ளனர்.

இந்தியாவை முன்னேற்ற பயோ பெட்ரோல் தயாரிப்பை தவிர வேறு வழியில்லை, கேரளாவில் 77பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்கவுள்ளோம். தமிழகத்திலும் பயோ பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளோம்.

எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது, மத்திய அமைச்சர்கள் சிலர் தடுக்கின்றனர், என்னுடைய தயாரிப்பை முடக்க நினைப்பவர் யார் என்பது குருமூர்த்திக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலிகை எரிபொருட்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.39க்கும், பயோ கேஸ் : 16 லிட்டர் ரூ.250க்கும் வழங்கவுள்ளோம். அதேபோல் தமிழகத்தில் தயாரிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 20க்கும் விற்பனை செய்யவுள்ளோம், என்னுடைய கண்டுபிடிப்பை என் தாயிற்கு சமர்பிக்கிறேன்” என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ஆர்எஸ்எஸ் சித்தாந்த பாஜக எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் பகிரங்க மன்னிப்பு