தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட புகாரில் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதால், அவரின் பதிவுகள் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். இந்திய விமானப் படை இதை விபத்து கூறிய நிலையில், ஆனால், யூடியூபர் மாரிதாஸ் இதை பற்றி வேறு விதமான கருத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டார். ஆனால், இதனால் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவரின் பதிவை அவரே நீக்கிவிட்டார்.

எனினும் மாரிதாஸ் பதிவிட்ட இந்த கருத்து, சமூக வலைதளங்களில் தீயாக பரவி, சட்டம் ஒழுங்கி பிரச்சனையாக உருவெடுத்தநிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ், அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து, பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் மீது தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயற்சி, பொது அமைதியை சீர்குலைத்தல், அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அதன்பின், கடந்த 10.12.2021 மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (14.12.2021) விசாரணைக்கு வந்தபோது, எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் இந்த வழக்கில் செய்யப்படவில்லை. எனவே மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாரிதாஸ் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், மற்றொரு போலி மெயில் போர்ஜரி வழக்கில் கைதாகியுள்ளதால், சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது.

முன்னதாக இதே உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமதித்ததாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கில், “தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும், எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை” என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.