தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் தொடர்பான மோசடி வழக்கில் மாரிதாஸை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக பதிவிட்ட மாரிதாஸ், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மாரிதாஸ் பதிவிட்ட இந்த கருத்து, சமூக வலைதளங்களில் தீயாக பரவி, சட்டம் ஒழுங்கி பிரச்சனையாக உருவெடுத்தது. இதுகுறித்து மாரிதாஸ் மீது புகார்கள் குவிந்ததால், கடந்த 09.12.2021 அன்று ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு, டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 18 நிர்வாகம் சார்பில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கடந்த ஆண்டு 10.07.2020 அன்று தனது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூபில் மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் மூத்த ஆசிரியர் வினய் சார்வாகி அனுப்பியதாக மெயில் ஒன்றை வெளியிட்டார். அதில் நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகத்தின் மீது மாரிதாஸ் தரப்பு கூறிய புகார்களை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும், அது தனக்குக் கிடைத்த வெற்றி என்றும் மாரிதாஸ் கூறியிருந்தார்.

மாரிதாஸின் இந்த வீடியோ பல பத்திரிகையாளர்களின் வேலையிழப்புக்குக் காரணமானது. இதையடுத்து அந்த மின்னஞ்சல் தங்களால் அனுப்பப்பட்டதல்ல; அது போலியானது என்று து நியூஸ் 18 பத்திரிகையாளர் வினய் சார்வாகி சென்னை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், நியூஸ்18 தமிழ்நாட்டில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வினய் சார்வாகி தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று (11.12.2021) அந்த மோசடி வழக்கில், தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரிதாஸை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸை கைது செய்தது வரவேற்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.