மசினகுடியில் காட்டு யானை மீது தீப்பற்ற வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யானைக்கு தீ வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவரை தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில், தற்போது வரை மட்டுமே யானை – மனித மோதல் காரணமாக மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

தற்போது நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானை கடந்த இரண்டு மூன்று மாதகாலமாக முதுகில் காயத்துடன் சுற்றி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை பிடித்து வனத்துறையினர் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே, கடந்த 1 வாரத்துக்கு முன்பு மரவகண்டி நீர்த்தேக்கத்துக்குள் காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டு யானையை பார்வையிட்டபோது இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் காதில் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிந்து தீக்காயம் ஏற்பட்டதால் யானை இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொன்றனர்.

இந்நிலையில், காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் மசினகுடி மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி வழியாக யானை சென்றபோது, யானை மீது எரியும் டயர்களை அந்த ரிசார்ட் ஊழியர்கள் வீசியுள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாமல் காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது மட்டுமல்லாமல், அந்த வீடியோவில், ‘அவ்வளவுதான். உள்ளே போய் எரிந்து சாவு’ என்று சொல்வது தெளிவாக கேட்கிறது. பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பங்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக நீலகிரியில் உள்ள மாவனல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட ரையன் என்பரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மூன்று பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன், ஊராட்சி செயலாளர் கிரண் மற்றும் வனத்துறையினர் சீல் வைத்தனர்.

சகோதரர்களாகிய ரேமண்ட் மற்றும் ரையன் இருவரும் தங்களின் தந்தைக்கு சொந்தமான வீட்டில், சட்ட அனுமதியில்லாத விருந்தினர் தங்கும் வசதியான ‘ஹோம் ஸ்டே’ விடுதியை நடத்தி வந்துள்ளனர் என்றும் இவர்களுடன் பிரசாந்த் என்பவரும் அங்கு தங்கியிருந்துள்ளார் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்