ஹரியானாவில் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால், எங்களிடம் அதிக அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது என அம்மாநில முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில், அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு மிக மோசமான விளைவை ஏற்படுத்திவருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள், தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். அதனால் எவ்வளவு வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறோமோ, அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் முன்றாவது அலையில் இருந்து மக்களை நாம் பாதுகாக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறிவருகிறது.

இருப்பினும் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய பாஜக அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாததால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசு உடனடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் கொள்கை திட்டம் வகுக்காதது ஏன் என்றும்,

பல மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது கூட்டாட்சி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிய அரசு தான் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஒன்றிய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி

மேலும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முல் செய்து மாநிலங்களுக்கு வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பாஜக ஆட்சியில்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தங்களிடம் தடுப்பூசி இருப்பில் இல்லை. உடனே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள பாஜக ஆளும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், “டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக செலுத்தியதால் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஹரியானாவில் 50 முதல் 60 ஆயிரம் வரையே தடுப்பூசி செலுத்துகிறோம். அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது” என அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில பாஜக முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக ஆட்சியில்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்